மீண்டும் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு அமைக்க அனுமதி

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

திருக்கேதீஸ்வரம் பகுதியில் அலங்கார வளைவு அமைத்த போது கடந்த வருடம் உள்ளக ரீதியில் இரண்டு மதங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் நேற்று (6) விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த தவணையின் போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் சிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக வளைவு அமைப்பதற்கான அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்ததன் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்திய மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் நல்லிணக்க அடிப்படையில் இரு நிர்வாகத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக குறித்த வளைவை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

அதே நேரம் குறித்த அலங்கார வளைவு தொடர்பான பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பாக கட்டளை வழங்குவதற்காக குறித்த வழக்கானது இம்மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை சார்பாக குறித்த வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!