வெகு விமரிசையாக நடந்தது பெரியகோயில் கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று ஓம் நம் சிவாயா என்று பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

சோழ பேரரசர் ராஜராஜ சோழனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் 1996ம் ஆண்டு கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு தொடங்கி 7.20 மணி வரை 8ம் கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னர் திருக்கலசங்கள் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சரியாக காலை 9. 20 மணிக்கு வானத்தில் கருடன் வட்டமிட்டதும், இறைவன் உத்தரவு கிடைத்ததாக கருதி, பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு வேத பண்டிதர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் மந்திரங்கள் முழங்க தமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச் சிவாயா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தஞ்சைக்கு லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் கோயிலிலும், தஞ்சையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தபடி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சை பெரிய கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

Sharing is caring!