அனைத்து எம்.பிக்களுக்கும் சபையில் நன்றி தெரிவித்து ரணில் உரையாற்றினார்

நாடாளுமன்ற அமர்வு இன்று நிறைவடைந்தவுடன் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேடிச் சென்று அவர்களுக்கு கைலாகு கொடுத்து நன்றி தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒரு நிமிடம் வரை அவர் அருகில் நின்று சிரித்தவாறு உரையாடினார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரியும், அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் நேற்று மாலை நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, வாக்களித்த அனைத்து எம்.பிக்களுக்கும் சபையில் நன்றி தெரிவித்து ரணில் உரையாற்றினார்.

அதன்பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாயாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிவரை சபை அமர்வை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து சபைக்குள் ரணிலை நோக்கிப் படையெடுத்து வந்த ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவருக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிச் செல்ல ஆயத்தமானபோது அவர்களைத் தேடி வந்த ரணில், அவர்களுக்கு கைலாகு கொடுத்து நன்றி தெரிவித்தார்.

முதலில் சம்பந்தனின் தோளில் கைவைத்து அவரின் காதுக்குள் நன்றி தெரிவித்த ரணில், அதன் பின்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைலாகு கொடுத்து நன்றி தெரிவித்தார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கைலாகு கொடுத்த ரணில், அவருடன் ஒரு நிமிடம் வரை சிரித்தவாறு உரையாடினார்.

Sharing is caring!