அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா உட்பட நான்கு சந்தேகநபர்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா உட்பட நான்கு சந்தேகநபர்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பில் தனியார் பல்கலைக்கழகம் நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருந்த 150 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கும் எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை விரட்டியடித்து விட்டு, இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபரான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மன்றில் ஆஜராகவில்லை.

இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்ட ஏனைய மூன்று சந்தேகநபர்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் 9 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மன்றில் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, வழக்கின் முதலாவது சந்தேகநபரான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அடுத்த வழக்குத் தவணையில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Sharing is caring!