அரசியல் அமைப்பில் இல்லாத அதிகாரத்தையும் பயன்படுத்துகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி முறைமையில் காணப்படும் அதிகாரத்தை குறைப்பதாக தெரிவித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று எம்முடன் இணைந்து கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகவும், ஆனால், இன்று அரசியல் அமைப்பில் இல்லாத அதிகாரத்தையும் பயன்படுத்துவதாகவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் நேற்று நள்ளிரவு அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி இன்று பழிவாங்குவது அவரை அந்தப் பதவிக்கு கொண்டு வந்தவர்களிடம் ஆகும். அவரைத் தோற்கடிக்க முயற்சித்தவர்களுடன் இன்று கைகோர்த்துள்ளார். இதுபோன்ற ஒரு ஜனாதிபதி உலகில் எங்கும் இருக்கமாட்டார். சர்வாதிகார ஜனாதிபதிகளும் கூட தனது எதிரியுடன் சேர்ந்துகொண்டு, தனது நண்பர்களுக்கு எதிராக செயற்பட்டது கிடையாது. தற்போது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தேர்தலுக்கு தயார். அதேபோன்று, சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்யவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!