அரசியல் சூழ்நிலை தொடர்பில் உத்தியோகப்பூர்வ முடிவை கட்சி அறிவிக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தானே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது ரணில் – மகிந்த தரப்பினர் அரசியல் காய்நகர்த்தல்களை மும்முரமாக முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் உத்தியோகப்பூர்வ முடிவை கட்சி இன்று சனிக்கிழமை அறிவிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து அறிவிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுப்பதாக அக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கச் செய்து அதிர்ச்சி அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!