அரசியல் நெருக்கடி நிலை சில தினங்களில் முடிவுக்கு வரும்

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை உறுதி செய்யும் போட்டியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி இன்னும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களே மஹிந்தவின் பெரும்பான்மைக்கு தேவைப்படுகிறது.

126 என்ற அதிக பெரும்பான்மை உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக திரைமறைவில் பேசப்பட்ட பேரங்கள் மூலம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த தரப்பின் பக்கம் இழுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தமிழ் உறுப்பினர்களும் உள்ளனர் என்பது சிறப்பம்சம்.

ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான உறுப்பினர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் மஹிந்த அணியில் இணைந்து கொள்வார்கள் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் 5 உறுப்பினர்கள் இன்னும் சில மணித்தியாலங்களில் புதிய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மேலும் 4 உறுப்பினர்களும், ரிசாத், ஹக்கீம் தலைமையிலான கட்சிகளில் உள்ள உறுப்பினர்களும் மஹிந்த அணியில் இணையவுள்ளனர்.

இதன்மூலம் இலங்கையின் அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பதை நிரூபிக்கும் பெரும்பான்மை அவர் பெற்றுவிட்டார் என்பதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் அரசியல் ரீதியான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மஹிந்த தரப்பின் பேரம் பேசல்கள் மூலம் கிடைத்த வெற்றியை அடுத்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sharing is caring!