அரச சேவையாளர் சம்பள திருத்தம்…விசேட ஆணைக்குழு நியமிக்க ஏற்பாடு

ரயில்வே ஊழியர்களுக்கு மாத்திரமன்றி அனைத்து அரச சேவையாளர்களினதும் சம்பள கொடுப்பனவை திருத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை அடுத்தவாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பள கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே தொழிற்சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அரச சேவையாளர்களின் இரண்டாம் தர சம்பளத் திட்டத்திற்கு அமைய அதிகரிக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக இன்றும் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

எவ்வாறாயினும், சாரதி இயந்திர பரிசோதகர்களை இணைத்துக்கொண்டு இன்று காலை சில ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்த போதும், போக்குவரத்து பற்றுச்சீட்டு இன்றி பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் கம்பஹா, குருநாகல், கண்டி உள்ளிட்ட பிரதான ரயில் மார்க்கங்களில் எவ்வித ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, ரயில் போக்குவரத்துகள் இடம்பெறாமை காரணமாக வௌிநாட்டவரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனினும், இன்று மாலை 10 அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Sharing is caring!