ஆடுகளுக்கு ஏறியுள்ள கிராக்கி

ஆடி மாதம் நெருங்குவதை முன்னிட்டு, கோயில் விழாக்களில் நேர்த்திக்கடன் செலுத்துவற்காக ஆடுகள் விற்பனை சந்தைகளில் களை கட்டி உள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிலர், விவசாயத்தோடு ஆடு வளர்ப்பு தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் தீபாவளி, ரம்ஜான் மாதங்களிலும், ஆடி மாத திருவிழாக்களிலும் ஆடு விற்பனை களை கட்டும். அதிக வருவாய் தருவதால் ஆடு வளர்ப்பு தொழில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகளவு விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிராமங்களில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு என தனித்தனி கொட்டகை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. படித்த வேலை இல்லாத இளைஞர்களும் அரசு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பெட்டை ஆடுகள் 10 முதல் 15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. கிடாக்களின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்கள்.

ஆடுகள் இறைச்சிக்காகப் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதன் தோலை கொண்டு விதவிதமான பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கால்நடை சந்தைகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் விற்பனை களை கட்டி வருகிறது. இங்கு 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 4,500 வரை விலை போகிறது.வரும் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது.

இதனை முன்னிட்டு தென்மாவட்டங்கள் மற்றும் தமிழகம் எங்கும் கோயில்களில் ஆடித்திருவிழா நடக்கும். விழாக்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை பலியிடுவது வழக்கம். பின்னர் கமகம பிரியாணி தயாரித்து, எலும்பு குழம்பு, சுக்கா வறுவல் செய்து மணக்க மணக்க விருந்து படைப்பார்கள். மேலும், புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் கறி சமைத்து விருந்துக்கு அழைப்பார்கள். எனவே, மற்ற தமிழ் மாதங்களை விட, ஆடி மாதத்தில் ஆடு விற்பனை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு ஆடுகளுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் பிறந்ததும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்தனர்.

Sharing is caring!