ஆர்ப்பாட்டம்…உருளைக்கிழங்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அரசாங்கம் கொள்வனவு செய்த உருளைக் கிழங்கிற்கான பணத்தை செலுத்துமாறு கோருவதற்காக விவசாயிகள் சிலர் இன்று கொழும்பிற்கு வந்திருந்தனர்.
வெலிமடை மற்றும் ஊவ பரணகம ஆகிய பகுதிகளைச் சேர்ச்த உருளைக் கிழங்கு செய்கையாளர்கள் இன்று முற்பகல் இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சிற்கு சென்று தமது வேண்டுகோளை முன்வைத்தனர்.
ஒரு கிலோகிராமிற்கு 92 ரூபா வழங்குவதாக வாக்குறுதியளித்து அரசாங்கம் உருளைக் கிழங்கை கொள்வனவு செய்தாலும், இதுவரையில் தமக்கான பணம் செலுத்தப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.
”6 மாதங்களுக்கு முன்னர் 92 ரூபாவுக்கு கிழங்கை கொள்வனவு செய்தனர். இதுவரை பணம் செலுத்தப்படவில்லை. இன்று காலை விவசாய அமைச்சரை சந்தித்தோம். உங்களிடம் நாம் கிழங்கு கொள்வனவு செய்யவில்லை, நீங்கள் சென்று ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று அமைச்சர் கூறினார்”
என ஊவ பரணகம – வெலிமடை ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோஹித்த ஜயசேகர குறிப்பிட்டார்.
சுமார் மூன்று கோடி ரூபா வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்து விவசாயிகள் விவசாய அமைச்சிற்கான வாயிலை மறித்து எதிர்ப்பில் ஈடுட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஊவா மாகாண விவசாய அமைச்சர் உபாலி சமரவீர சென்றதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
மக்களுக்கான பணத்தை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தன்னிடம் தெரிவித்ததாக ஊவா மாகாண விவசாய அமைச்சர் உபாலி சமரவீர இதன்போது கூறினார்.
தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் விவசாய அமைச்சை சுற்றிவளைக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.