ஆர்ப்பாட்டம் செய்வதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு சார்பாக சில ஊடகங்கள் செயற்பட்டு வந்தாலும் அது அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மக்களுக்கு உண்ணவும் குடிக்கவும் கொடுத்து கொழும்புக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்வதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை மீறுவதற்கு எதிரணியினர் முன்வருவார்களாயின் அவர்களுக்ெகதிராக கடும் நடவடிக்ைக எடுக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று 2025 ஆம் ஆண்டுவரை இந்த அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுமென்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் நாளை 05 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் அனைவருக்கும் தமது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதற்காக ஆர்ப்பாட்டம் செய்து அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென எடை போட்டால் அது முற்றிலும் தவறு. எதிரணியினர் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தினால் அப்பாவி மக்கள் அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடுமே தவிர அது எவ்வகையிலும் அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின்போது கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே இவர்கள் ஆர்ப்பாட்டத்துக்காக ஆட்களை திரட்டுகிறார்கள். அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, தமக்கு ஆட்பலம் இருப்பதாக எதிரணியினர் காட்ட முயற்சிக்கின்றார்கள். எது எவ்வாறானாலும் எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

Sharing is caring!