இடமாற்றம் பெற்றும் புதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்கள், தாதியர்களின் சம்பளம் இடைநிறுத்தம்

இடமாற்றம் பெற்றும் புதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இடமாற்றம் பெற்றுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை புதிய பணியிடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கும் வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை நிறுத்துவதுடன், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படும்போதும் இந்த விடயம் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சரின் தலைமையில் நாரஹென்பிட்டிய தேசிய இரத்த வங்கியில் நடைபெற்ற மாநாட்டின்போது, அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பிரதேச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் புதிய பணியிடங்களுக்கு செல்லாத காரணத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Sharing is caring!