இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம்

நாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டினை மீண்டும் ஒருமுறை நாடகக்காரர்களுக்கும் வேசம் தரிப்பவர்களுக்கும் ஒப்பனைகலையாமல் மேடைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஏழை எளிய மக்களின் பசித்த வயிறு தெரியாதவர்களுக்கும் வழங்கமுடியுமா?

கடந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை, ஊடக சுதந்திரம் இருக்கவில்லை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள் இனங்காணப்பட்டு படுகொலை செய்யும் நிலமையும் காணப்பட்டது. எந்த சுதந்திரமும் அந்த ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை.

தாங்களும் தங்கள் குடும்பங்களும் நாட்டினை சூறையாடிவிட்டு இந்த நாட்டு மக்களை ஒரு பொருட்டாக கொள்ளாமல் தங்களது நிலைப்பாடுகளையே நாட்டின் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டனர்.

அவ்வாறான கயவர்களுக்கு இந்த நாட்டினை தொட்டு தழுவுவதற்கு நாட்டினை கொடுக்கப்போகின்றீர்களா?, இதனை ஒவ்வொருவரும் தங்களது மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் பெற்ற அனுபவத்தினை சிந்தித்துபாருங்கள்.

எமது நல்லாட்சியில் இந்த பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகாணியை நாங்கள் வழங்கியுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒருகடுகளவாவது காணிகள் வழங்கப்பட்டுள்ளதா? இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதா?. அவர்கள் இதனையெல்லாம் செய்யமாட்டார்கள், அவர்கள் இவ்வாறானவற்றை தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்ளுவார்கள்.

மதவாதங்களை உருவாக்கி, இனவாதங்களை உருவாக்கி சமய ஸ்தலங்களை எரித்துவிட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் மக்களினால் விரட்டியக்கப்பட்டனர். மீண்டும் ஒருமுறை எரித்த சமய ஸ்தலங்களுக்கு வருகைதந்து வழிபாடுகளில் கலந்துகொள்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் மக்கள் நன்றாக சிந்திக்கவேண்டும், அவர்களை வேறுபடுத்தி பார்க்கவேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடக்க ஒடுக்கி ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் நாட்டின் வளங்களை சூறையாடியவர்கள், மக்களின் வாழ்விடங்களை அழித்தவர்கள் மீண்டும் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்து கொள்ளவேண்டும், அந்த மாளிகையில் பள்ளி கொள்ள வேண்டும் என சிந்திக்கின்றனர்.

இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்கமாட்டோம். அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மதங்கள், மொழிகளை மறந்து ஒருதாய் பிள்ளைகள்போல் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும்.

அதற்காக கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்களை கொண்டுவந்த தலைவர்களை மீண்டும் ஒருமுறை சிங்காசனத்தில் அமரவைப்பதா அல்லது வீடுகளுக்கு வந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு இந்த நாட்டில் இடமளிப்பதா என்பதை மக்களே சிந்திக்கவேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!