இன்றிரவு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, கலஹா புப்புரஸ்ஸ பிரதான வீதியின் லெவலன் பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியூடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கலஹா புப்புரஸ்ஸ பிரதான வீதியின் லெவலன் பகுதியில் பாரியளவான இரண்டு கற்பாறைகள் நேற்றிரவு சரிந்து வீழ்ந்துள்ளன.
இதனால், இந்த வீதியூடாக சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
கலஹா – புபுரஸ்ஸவிற்கான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பாரிய கற்பாறை சரிந்து விழும் நிலையிலுள்ளது.
இதேவேளை, பலத்த மழைக் காரணமாக மன்னார் – புத்தளம் பிரதான வீதியின் எழுவான்குளம் சப்பாத்து பாலத்திற்கு மேலாக வௌ்ளம் பாய்கிறது.
கலா ஓயா பெருக்கெடுத்ததையடுத்து, பாலத்திற்கு மேலாக சுமார் இரண்டு அடிக்கு நீர் நிரம்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக மன்னார் புத்தம் வீதியுடனான போக்குவரத்து மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.