இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்து, பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி 12மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலும் மறுநாளும் மனுக்களை பரிசீலனை செய்த பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த வர்த்தமானியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.

அன்றைய தினம் உயர் நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய இன்றும் நாளையும் நாளை மறுதினமும் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைக்காக பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையில் 7 பேர் கொண்ட பூரண நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்ணான்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Sharing is caring!