இராட்சத அலைகள் 2,50,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டன

14 நாடுகளில் மக்களின் குடியேற்றப் பகுதிகளை ஆக்கிரமித்த இராட்சத அலைகள் 2,50,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டன.

சற்றும் எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட பேரிடரால் இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

அந்த நினைவலைகளை நாம் இன்று மீட்டிப்பார்கின்றோம்.

2004.12.26…

மக்கள் மனங்களிலிருந்து நீங்காத நினைவுகள். ஒரு நிமிடத்தில் உலகையே புரட்டிப்போட்டது இயற்கையின் சீற்றம். பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

சுனாமியின் கோரத்தாண்டவம் இலங்கைத் தீவினையும் ஒரு முறை மௌனிக்க வைத்தது.

சுமார் 13,000 தீவுகளை உள்ளடக்கிய சிறிய இராஜ்யமான இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவிற்கு அண்மித்த கடற்பரப்பை ஆழிப்பேரலை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

இலங்கையில் இருந்து 1600 கிலோமீற்றர் தொலைவில் சுமத்திரா தீவை அண்மித்த பகுதியில் இலங்கை நேரப்படி காலை 6.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நில அதிர்வு இடம்பெற்று 30 செக்கன்களில் இந்தோனேஷியாவில் ஆழிப்பேரலை ஊழிக்கூத்தாடியது.

இலங்கையில் உடனடியாக இதன் தாக்கம் உணரப்படாத நிலையில் இலங்கையின் கரையோரம் வழமைபோன்று காணப்பட்டது.

பின்னர் காலை 7.28 மணியளவில் இலங்கையிலும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு உட்பட வடக்கு கிழக்கு கரையோர பிரதேசங்கள் மற்றும் காலி, மாத்தறை, ஹம்பந்தோட்ட மற்றும் களுத்துறை உள்ளிட்ட தென் கரையோர பிரதேசங்களை ஆழிப்பேரலை அள்ளி விழுங்கியது.

எமது நாட்டில் சுமார் 35,000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 5,000க்கும் அதிகமானவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன

அதேநேரம், 979 குழந்தைகள் பலியாகினர். மேலும், 3,954 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.

Sharing is caring!