இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி மஹாகமகே காமினி கைது

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி மஹாகமகே காமினி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சத்தை பெற்றுக்கொண்டபோது இந்தக் கைது இடம்பெற்றதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

10 வருடங்கள் பழமைவாய்ந்த இரண்டு வாகனங்களை சட்டவிரோதமாக ஜப்பானில் இருந்து கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை வழங்குவதன் பொருட்டே இந்த இலஞ்சத்தொகை பெற்றுக்கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேரம்பேசிய தொகை வழங்கப்படாத பட்சத்தில், வாகனங்களை கொண்டு வருவதற்கான பரிந்துரைகள் இரத்து செய்யப்படுமென்ற அச்சுறுத்தலை விடுத்து இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரி இந்த இலஞ்சத் தொகையை பெற்றுக்கொண்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இலஞ்ச ஊழல் மறுசீரமைப்பு சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

Sharing is caring!