இலங்கைப் படையினர் இராசாயன குண்டுகளையோ, கொத்தணி குண்டுகளையே பயன்படுத்தவில்லை
இறுதி யுத்தத்தில் இலங்கைப் படையினர் இராசாயன குண்டுகளையோ, கொத்தணி குண்டுகளையே பயன்படுத்தவில்லை என்றால், ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய கட்டளை சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேசத்தின் விசாரணையை அரசாங்கத்திலுள்ளவர்கள் எதிர்க்கின்றார்கள். ஒரு இனத்தின் மீதான இனவழிப்பை மேற்கொள்ளவில்லை என்றால் ஏன் அந்த அரசாங்கம் பயப்பட வேண்டும்.
அந்தவகையில் அரசாங்கம் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரங்களை வைத்திருந்தால் ஏன் சர்வதேசத்திற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ பயப்படவேண்டும்?
இந்தநிலையில், இன்று இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்ற பல நாடுகள் தம்மைக் கைவிட்டுவிட்டதாகவே தமிழர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் தமிழர்கள் மீதான கரிசனை குறைந்து விட்டதாகவே தமிழ்ச் சமூகம் எண்ணிக்கொண்டிருக்கின்றது” என எஸ்.சிறீதரன் மேலும் குறிப்பிட்டார்.