இலங்கையின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சு

இலங்கையின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தவுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது, “ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகளை  இன்று  வெள்ளிக்கிழமை நான் சந்திப்பேன். அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது பற்றிப் பேசுவேன்” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்கமைய இன்று சந்திப்புகள் இடம்பெறுகின்றன. எனினும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஜே.வி.பி. பங்கேற்காது என்று கூறப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Sharing is caring!