இலங்கை அதிபரை கொலை செய்ய சதி தீட்டியதாக கைதான இந்தியர் விடுதலை

கொழும்பு:
போதிய ஆதாரமில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் இந்தியர். எதற்காக தெரியுங்களா?

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியதாக கடந்த ஆண்டு கைதான இந்தியருக்கு எதிராக போதிய ஆதாரமில்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மர்செலி தாமஸ். இலங்கையில் தங்கி இருந்த இவர் அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் தம்பியும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஆலோசகருமான கோத்தப்பய ராகபக்சே ஆகியோரை கொல்வதற்கு திட்டமிட்டு வந்ததாக இலங்கை ரகசிய போலீஸ் படையை சேர்ந்த உளவாளியான நாமல் குமாரா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட மர்செலி தாமஸ் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இவர் மீதான வழக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தது. மர்செலி தாமஸ்-ஐ கைது செய்த ரகசிய போலீசார் தரப்பில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்பிக்கப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இன்னும் இரு வாரங்களுக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார்.

ஆனால், போலீஸ் தரப்பில் சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இவ்வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி ரங்க திசநாயகே உத்தரவிட்டார்.
எனினும், தனது விசா காலம் காலாவதியான பின்னரும் அனுமதியின்றி இலங்கையில் தங்கி இருந்த குற்றத்துக்காக மர்செலி தாமஸ் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!