இலங்கை சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது

இலங்கை:
இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இருப்பினும் வடக்குமாகாணத்தில் கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி போராட்டங்களும் நடந்தன.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. எனினும் வடக்கு மாகாணத்தில் இன்றைய நாளினை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் கவன ஈர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் ”எமக்கு எப்போது சுதந்திர தினம்”? எனக் குறிப்பிட்டுள்ள பதாதகையும் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த சுதந்திர தினம் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளது.
“இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையிலும், உள்நாட்டு யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இதுவரை கண்டறியப்படவில்லை.

தமிழர் நிலங்களில் இருந்து ராணுவம் வெளியேறவில்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரது பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுகின்றன. தொல்பொருள் திணைக்கள ஆய்வு என்ற வகையில் வணக்கஸ்தலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. புலிகள் மீளுருவாக்கம் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகின்ற அவலம் தொடர்கிறது” என மாணவர் ஒன்றியும் புகார் கூறியுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு இன்றுவரை தடைகளே காணப்பட்டு வருகின்ற நிலையில் யாருக்கு சுதந்திரம் கிடைத்தது என்கிற கேள்வியே எல்லாவற்றையும் முந்திக்கொண்டு கேள்விக்குறியாய் எம்முன்னே எழுந்து நிற்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!