இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் இன்று (04) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண பிராந்திய பொது முகாமையாளரை இடமாற்றக்கோரி இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முகாமையாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், அவரை உடனடியாக வௌியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழியர்களின் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வட மாகாண பிராந்திய பிரதம முகாமையாளர் கந்தசாமி கேதீசனிடம் நாம் வினவியபோது, ஊழியர்கள் முறையற்ற விதத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தம் மீதான குற்றச்சாட்டுக்குத் தீர்வு வழங்கவேண்டிய விதம் தொடர்பிலும் ஊழியர்கள் உரிய முறையில் குறிப்பிடவில்லை எனவும் கந்தசாமி கேதீசன் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சிக்கல் நிலைமை தொடர்பிலான விசேட கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு தலைமைக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம பி.எச்.ஆர்.டி. சந்திரசிறியிடம் நாம் வினவியபோது, வட மாகாண பிராந்திய முகாமையாளர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதிய முகாமையாளரை நியமிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Sharing is caring!