இலங்கை மீனவர்கள் அனைவரையும் விடுவித்துக் கொள்வதற்கான இயலுமை ஏற்பட்டுள்ளது

சிஷெல்ஸ் நாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் அனைவரையும் விடுவித்துக் கொள்வதற்கான இயலுமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அகில இலங்கை நன்னீர் மற்றும் நீரியல்வள உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டிலிருந்து கடற்றொழிலிற்காகச் சென்ற மீனவர்கள் சிலர் சிஷெல்ஸ் கடல் பிராந்தியத்திற்குள் மீன்பிடியில் ஈடுபட்டபோது, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோது, நமது மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான முன்னேற்றகர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் அனைவரும் நன்னீர் மீன்பிடியூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய வகையில் ஒத்துழைப்பை வழங்கும் பிரிவினர். நன்னீர் மற்றும் கடற்றொழில் உற்பத்தியை 2025 ஆம் ஆண்டாகும் போது 150,000 மெற்றிக் தொன் ஆக்குவதே எமது இலக்கு என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்கின்றேன். தற்போது உங்களுக்கான சேவையாற்றும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபைக்கு 2014 ஆம் ஆண்டு 358 மில்லியன் நிதியே ஒதுக்கப்பட்டது.

எனினும், 2017 ஆம் ஆண்டு 2,435 மில்லியன் ரூபா வரை அதனை அதிகரித்தோம். இதனூடாக தற்போதைய அரசாங்கம் உங்களுக்காக பாரியளவு நிதியை ஒதுக்கீடு செய்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த அரசாங்கத்தை விட நாங்கள் மீனவர்களிற்காக பாரியளவில் நிதியை ஒதுக்கீடு செய்கின்றோம் என ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!