ஈழத்து நாடக இமயம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை யாழில் திடீர் மறைவு..!!

ஈழத்தின் பிரபல நாடக ஆசிரியரும், நாடக கலைஞரும், புகழ்பூத்த எழுத்தாளருமான கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(08) தனது 86 ஆவது வயதில் அவரது சொந்த ஊரான அராலியில் காலமானார்.1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்-22 ஆம் திகதி யாழ். அராலியில் பிறந்த ந. சுந்தரம்பிள்ளை யாழ்ப்பாணம் நீராவியடி கடையிற்சுவாமி வீதியை நீண்டகால வசிப்பிடமாக கொண்டிருந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா- பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற மங்கயற்கரசியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற மணிவண்ணனின்(ஆசிரியர்) பாசமிகு தந்தையாரும் ஆவார்.

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான ந. பாலசுந்தரம்பிள்ளை பட்டப்பின்படிப்பாக ‘கல்வி டிப்ளோமா’ பட்டத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன் நீண்டகாலமாக ஆசிரியர் பணியும் ஆற்றியுள்ளார்.இவரது முதலாவது சிறுகதை கடந்த -1950 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் ‘கையொப்பம்’ எனும் தலைப்பில் வெளியானது.இவரின் சிறுகதைகள் இலங்கையில் வெளிவரும் தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

பல எண்ணிக்கையான சிறுகதைளை இவர் எழுதியிருந்தாலும், சிறுகதைத் துறையினை விட நாடகத்துறையிலேயே இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது முதலாவது நாடகம் கடந்த1954 ஆம் ஆண்டு டிசம்பர்-31 இல் ‘இழந்த காதல்’ எனும் தலைப்பில் அராலி சரஸ்வதி வித்தியாசாலையில் அரங்கேற்றம் கண்டது. இந்த நாடகத்தின் நாடக ஆசிரியராகவும், கதாநாயகனாகவும் இவரே திகழ்கிறார்.கடந்த- 1959 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியேற்ற பின்னர் இவர் தனது சொந்த மண்ணான அராலியில் மேடை நாடகத் தொழிற்பாடுகளில் முழு மூச்சில் ஈடுபடலானார். இந்நிலையில் கடந்த 1954 இற்கும் 1974 இற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் இருபது நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.

இவரது முதலாவது வானொலி நாடகம் இலங்கை வானொலியில் ‘நானே ராஜா’ எனும் தலைப்பில் கடந்த -1980 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் சுமார் 385 இற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.இவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று பின்னர் முழுநேர வாசிப்பையும், எழுத்தையும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்து வந்தார்.அராலியூர் ந. சுந்தரம்பிள்ளையின் இழப்பு ஈழத்து நாடகத்துறைக்கு பேரிழப்பு என்றால் மிகையாகாது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் எமது செய்திச் சேவை சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கின்றோம்.இதேவேளை, அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று திங்கட்கிழமை(09) அராலி இந்து மயானத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!