உடனடியாக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தலொன்றை நடத்த வேண்டும்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உடனடியாக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தலொன்றை நடத்த வேண்டுமென முதுமாணி கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வேண்டுகோளை ஏற்று தேர்தலை நடத்துபவர்கள் பெரும் புண்ணியவான்கள் என அவர் தெரிவித்தார். அவர் இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ‘பிரகதிசீலி சேவக’ சங்கத்தின் லேக்ஹவுஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதி பூஜை நிகழ்வில் தெரிவித்தார். கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஆசீர்வாதம் வேண்டி ‘பிரகதிசீலி சேவக’ சங்கத்தால் இந்த புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது நாடு முகங்கொடுத்துள்ள குழப்ப நிலைமைக்கு ஒரே தீர்வாக விரைவில் பொதுத் தேர்தலை நடத்த சந்தர்ப்பம் ஏற்பட வேண்டுமென அங்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

அங்கு தொடர்ந்து பேசிய கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் தெரிவித்ததாவது:

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பிரகதிசீலி சேவக சங்கத்தின் லேக் ஹவுஸ் கிளையின் தலைவர் சந்தன பண்டார உள்ளிட்ட ஊழியர்கள் இந்த புண்ணிய நிகழ்வை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக ஏற்பாடு செய்துள்ளார்கள். அதே போல் நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினையிலிருந்து வெளிவர ஒரே தீர்வாக விரைவில் பொதுத் தேர்தலொன்றை நடத்த சந்தர்ப்பம் ஏற்பட வேண்டுமென்பதே ஊழியர் சங்க பிரார்த்தனையாகும்.

நாடு அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசாரம் என்னும் நான்கு பிரிவுகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள இந்த நிலைமையில் நாட்டின் பெரும்பாலான மக்களின் பிரார்த்தனை ஒன்றுள்ளது. நாட்டில் கல்வி கற்ற, கற்காத, ஏழை, பணக்கார அனைவரினதும் பிரார்த்தனை நாடு வீழ்ந்துள்ள குழியிலிருந்து அதனை மீட்பதாகும். மூளையுள்ள அனைவருக்கும் அதற்காக செய்ய வேண்டியுள்ளது என்னவென்று புரியும்.

இன்று இந்த நாட்டில் மதத் தலைவர்கள் அனைவரினதும் பிரார்த்தனை நிலையான நாடொன்று உருவாகுவதாகும். நீண்ட கால சரித்திரத்தையுடைய பௌத்த நாடான இலங்கையின் மகாசங்கத்தினரதும் விசேட வேண்டுகோள் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நாட்டில் நிலையான தன்மையை உருவாக்க வேண்டும் என்பதாகும். மஹா சங்கத்தினராக அவ்வாறான வேண்டுகோளை விடுக்கும் பொறுப்பு எமக்குண்டு. நாம் அறிந்த வரையில் நாட்டில் நிலையான தன்மையை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென்பதால் பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து உடனடியாக தேர்தலொன்றை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எமது நாடு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்த நிலைமையில் வெளிநாட்டு சக்திகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எண்ணுவதாகத் தோன்றுகின்றது. இன்று நாட்டின் நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள அவர்கள் முனைகின்றார்கள். எமக்கு கட்சி,நிறங்கள் தேவையில்லை. எமக்கு நாட்டின் பாதுகாப்பே அவசியமானது. நாட்டைப் பாதுகாப்பவர்களுக்கு எமது ஒத்துழைப்புக் கிடைக்கும்.

இன்று நாட்டின் வேண்டுகோள் பொதுத் தேர்தலாகும். இந்தக் காரியத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை நாம் புண்ணியவான்களாகக் கருதுகின்றோம். நாம் அனைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் கட்சி பேதமின்றி மதிக்கின்றோம். அவர் நாட்டை மீட்க தைரியமாக முடிவெடுத்த தலைவராவார்.

வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது, முப்பது வருட கால யுத்தத்தை நிறைவு செய்தவர் என்பதை நன்றியுள்ள இனமாக நாம் அதனை மறக்கக் கூடாது. அவர் இந்த நாட்டை காப்பாற்றி இருக்காவிட்டால் நாம் இன்று இந்த போதி பூஜை நிகழ்வை நடத்தியிருக்க முடியாது.

இந்த இடத்தில் இரண்டு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அந்த நாட்களில் நாம் அனைவரும் பயத்துடனேயே வாழ்ந்து வந்தோம். நாம் இன்று பயமின்றி வாழ்கின்றோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புண்ணியம் கிடைக்கட்டும். அதனால் எமக்கு நிறைவேற்றுவதற்கு கடமையொன்றுண்டு. இன்று அவரை நாட்டு மக்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றார்கள்”.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சட்டப் பணிப்பாளர் ரஸங்க ஹரிஸ்சந்திர, பொது முகாமையார் அபய அமரதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பிரகதசிலி ஊழியர் சங்கத்தின் லேக்ஹவுஸ் கிளையின் தலைவர் சந்தன பண்டார உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Sharing is caring!