உயர்தர மாணவர் நலன்கருதி இராணுவ பஸ்கள் சேவையில்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களின் நலன்கருதி, இராணுவ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (08) மாலை முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.

பயணிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, நேற்றிரவு 10 மணிக்கு பின்னர் ஓரிரு ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.

எனினும், ரயில்களின் பாதுகாப்பின் நிமித்தம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் கடமையில்
ஈடுபட்டத்தப்பட்டனர்.

இதனையடுத்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சேவையில் அமர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இலங்கை போக்குவரத்து சபையின் கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்தினரால் மாணவர்களுக்கு இலவச சேவையை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், பகிஷ்கரிப்பைக் கைவிட்டு, கோரிக்கைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு விரைவாக கலந்துரையாடலுக்கு வருமாறு ரயில்வே தொழிற்சங்களுக்கு அரசங்கம் அழைப்பு விடுத்தது.

அதற்கமைய நிதி அமைச்சில் நேற்றிரவு விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

Sharing is caring!