ஊழியர் சேமலாப நிதியை வர்த்தகத்தில் ஈடுபடுத்தியதால் பாரிய நட்டம்


நாட்டின் உழைக்கும் மக்களின் பணத்தினால் பேணப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தை கடந்த காலங்களில் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபடுத்தியமையினால் பாரிய நட்டம் ஏற்பட்டது.

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (01) இது தொடர்பில் பல விடயங்கள் அம்பலமாகின.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று சாட்சியளித்தார்.

அவர் வழங்கிய தகவல்களின்படி, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட காகில்ஸ் வங்கியில் ஊழியர் சேமலாப நிதியத்தின் 495 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டுக்காக எவ்வித ஈவுத் தொகையும் கிடைக்கவில்லையென இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், கென்வில் ஹோல்டிங் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 5 பில்லியன் ரூபாவிற்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலணித் தலைவர் காமினி செனரத்ன மற்றும் பியதாஸ குடா பாலகே உள்ளிட்ட நால்வர் கென்வில் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக செயற்பட்டுள்ளதுடன், ஹயட் ஹோட்டல் திட்டத்தன் முறைகேடுகள் தொடர்பில் அவர்களுக்கு எதிராக தற்போது வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

சட்டவிரோதமாக அவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தை கென்வில் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வேறு நிறுவனமொன்றில் ஈடுபடுத்தி மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கன் விமான சேவையின் 500 மில்லியன் ரூபாவை அவ்வேளையில் காணப்பட்ட சட்டங்களை மீறும் வகையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று சாட்சியளித்த குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் மட்டும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என அவ்வேளையில் காணப்பட்ட சட்டத்தை மீறி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான முதலீடுகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநரின் விசேட அனுமதி தேவைப்படுகின்ற போதிலும், அந்த அனுமதியும் பெறப்படவில்லை.

அவ்வேளையில், மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலே செயற்பட்டார்.

ஊழியர் சேமலாப நிதியம் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்த 500 மில்லியன் ரூபாவின் தற்போதைய பெறுமதி 100 ரூபா எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியளித்த அதிகாரி குறிப்பிட்டார்

Sharing is caring!