எங்களை வைத்து பிழைப்பு நடாத்துவார்கள்….ஒன்றும் செய்ய மாட்டார்கள்

காணாமல் ஆக்கப்பட்டுள்ள எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கும், ஐ.நாவுக்கும் தொியாமல் இல்லை. ஆனால் அவர்கள் தமக்கு தெரியாததுபோல் நடந்து கொள்கிறார்கள்.

மேலும் தமிழ் அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட எமக்காக பேசுவதற்கு தயாராக இல்லை மாறாக அரசாங்கத்துடன் இணைந்திருந்து எங்களை காட்டிக் கொடுப்தற்கே திடமாக இருக்கின்றார்கள்.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சங்கம் சார்பில் அதன் தலைவி த.கமலநாயகி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 1996ம், 1997ம் ஆண்டுகளில் யாழ்.குடாநாட்டில் பலர் காணாமல்போனார்கள். அந்தக் காலத்தில் இளைஞர்கள் க டத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் வழக்கமாக இருந்தது. அவ்வாறு கடத்தப் பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவது கிடை யாது. மாறாக பல இளைஞர்கள் கடத்தப்படவும்,

கைது செய்யப்படவும் காரணமாக அவர்களே காரணமாக இருந்தார்கள். செம்மணி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் கூறியுள்ளார் அந்த பகுதியில் சுமார் 400 பேருடைய சடலங்கள் இருப்பதாக,

அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒருபுறமிருக்க வன்னி போர் நிறைவடைந்த காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், போருக்குள்ளிருந்து தப்பி முகாம்களுக்கு சென்றவர்கள் என பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்கள் தொடர்பாக இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இவையெல்லாம் எமது அரசியல்வாதிகளுக்கு தெரியாத விடயமல்ல.

அவர்களுக்கு எல்லாம் தெரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் கூறமாட்டார்கள். தமக்கு ஒன்றுமே தெரியாததுபோல் நடிக்கிறார்கள்.

அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு எங்களை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக் கின்றார்கள். போரில் பாதிக்கப்பட்டதும், காணாமல்போனதும், கொலை செய்யப்பட்டதும் அப்பாவி மக்களுடைய பிள்ளைகள்.

அரசியல்வாதிகளுடைய பிள்ளைகள் அல்ல. எனவே எங்களுடைய நாட்டவர்களை நம்பி பயன் எதுவும் இல்லை. இந்நிலையில் சர்வதேசம் எமக்கு ஆதரவு வழங்கவேண்டும், எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?

என்பதை கண்டறிய விசாரணை நடத்தவேண்டும். அதேபோல் இலங்கை அரசாங்கத்திற்கு 2 தடவைகள் கால அவகாசம் வழங்கியும் பயன் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் கால அவகாசம் பெறுவதற்கு சிலர் நினைக்கிறார்கள்.

அவ்வாறே கால அவகாசம் வழங்கினாலும் அரசாங்கம் விசாரணை குழுக்களை நியமிக்கும், விசாரணை நடாத்தும் ஆனால் அவற்றினால் பயன் எதுவும் கிடைக்காது. 23 வருடங்களாக நாங்கள் எத்தனை விசாரணைகளுக்கும்,

எத்தனை ஆணைக்குழுக்களுக்கும் சென்று வந்திருக்கிறோம். ஆனால் ஒன்றினாலும் பயன் எதுவும் இல்லை. அரசாங்கம் குற்றம் செய்தவர்களுக்கு பதவி உயர்வை மட்டு மே வழங்கும் என்றார்.

Sharing is caring!