எதிர்க்கட்சியின் உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு தற்காலிகத் தடை

பாராளுமன்ற அமர்வின்போது அமைதியற்ற முறையில் செயற்பட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு தற்காலிகத் தடை விதிப்பதற்கு பரிந்துரைக்கபடவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை நேற்று (16) பாராளுமன்ற சிறப்புரிமைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சிறப்புரிமைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த பிரசன்ன ரணவீர, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், குறைந்தபட்சமாக 4 வாரங்களுக்குத் தடை விதிக்க முடியும் என அவர் கூறினார்.

இரு சந்தர்ப்பங்களில், அமைதியற்ற முறையில் செயற்பட்டதால் பிரசன்ன ரணவீரவிற்குத் தடை விதிப்பதற்குப் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்தின்போது, அமைதியற்ற முறையில் செயற்பட்டதுடன், செங்கோலையும் எடுப்பதற்கு முயற்சித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் பரிந்துரையை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர், அமைதியற்ற முறையில் செயற்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!