எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச சரியே

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவை நியமித்த எனது முடிவு சரியானது. நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையிலேயே அது எடுக்கப்பட்டது. ஆனால், அதை அவசரமாக செய்தது எனது தவறு அதை ஏற்றுக்கொள்கிறேன்“

இவ்வாறு தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசியபோதே, சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

கடந்த 21ம் திகதி நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது. கூட்டமைப்பு எம்.பிக்களுடன் சபாநாயகர் பேச விரும்புகிறார் என்று கூறப்பட்டு, கூட்டமைப்பின் எம்.பிக்கள் சுமார் எட்டுப் பேர் சபாநாயகரிடம் அழைத்து செல்லப்பட்டனர்.

“எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதால் கூட்டமைப்பு எம்.பிக்கள் கொதித்து போயிருப்பார்கள் என கருதிய சபாநாயகர், எங்களை சாந்தப்படுத்துவதற்காக பேசுவதற்கு அழைத்திருக்கலாமென நினைக்கிறேன். ஏனெனில் அவரது பேச்சு அப்படித்தான் இருந்தது“ என, சந்திப்பு குறித்து தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்ட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியொருவர் தெரிவித்தார்.

“நாடாளுமன்ற சம்பிரதாயங்களிற்கு உட்பட்டே நான் இந்த முடிவை எடுத்தேன். எனது முடிவில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த முடிவை அவசரப்பட்டு எடுத்தது எனது தவறுதான். ஒரு காலஅவகாசத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாமென்பதை ஏற்றுக்கொள்கிறேன்“ என சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

“நாடாளுமன்ற சம்பிரதாயங்களின்படி என்ன சரியான முடிவை எடுங்கள்“ என்று மட்டும் வலியுறுத்தினோம் என சபாநாயகருக்கு தெரிவித்தோம் என்றனர்.

Sharing is caring!