எதிர் கட்சி தலைவர் தொடர்பான தீர்மானம் இன்று

சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று (07) பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இந்த மாதத்திற்கான முதலாவது சபை அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, எதிர்கட்சித் தலைவராக யார் செயற்பட முடியும் என்பது தொடர்பில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 70 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கையளிக்கப்பட்ட கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைமை பதவி தமது அணியினருக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஏற்கனவே சபாநாயகர் இது தொடர்பில் விளக்கம் கோரியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவ நேற்று இரவு சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததுடன் அவர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பெயரில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் பதவியேற்றதனைத் தொடர்ந்து அதற்கு அவர்கள் எதிர்ப்பு வௌியிட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Sharing is caring!