எம்.ஏ. சுமந்திரன் கொலை முஙற்சி தொடர்பாக 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் இன்று (04) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று, தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, இலக்கம் – 6, மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு பிரதிவாதிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அவர்களது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்குப்படுத்தித் தருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் போராளிகளான ஐவரை, கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!