எரிவாயுவின் விலையை அதிகரிக்க நிறுவனங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நிறுவனங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு இணக்கம் தெரிவிப்பதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதாகவும் டீசல் விலை அதிகரிப்பானது எரிபொருள் விலை சூத்திரத்தை பாதிக்கும் எனவும் இதன்போது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கான செலவுகளை உள்ளடக்கிய விலை தொடர்பில் அறிவிக்குமாறு விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.