ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு

இலங்கை:
தந்தையை இழந்த ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையினை பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையரை இழந்த ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு, அந்த மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபாய் நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிதியை கிழக்கு மாகாணத்தில் தந்தையரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சமூக சேவைகள் அமைச்சுக்களின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது ஆளுநர் மாளிகையினை பராமரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியிலிருந்து, கிழக்கு மாகாண பாடசாலைகளில் தரம் 01 முதல் 05 வரை கற்கின்ற, தந்தையரை இழந்த மாணவர்களுக்கு , மாதம்தோறும் 500 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!