ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது

இந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

இரண்டு நாள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தியக் கடற்படையின் நாசகாரி கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ராஜேஸ் நாயர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையின் மேற்கு பிராந்திய தளபதி றியர் அட்மிரல் நிசாந்த உலுகெதென்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதில் இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவும் கலந்து கொண்டார்.

146 மீற்றர் நீளம் கொண்ட ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பலில் 35 அதிகாரிகள் உள்ளிட்ட 350 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

அதிநவீன பிரமோஸ், தனுஷ் உள்ளிட்ட ஏவுகணைகளைத் தாங்கிய இந்தக் கப்பலில் உலங்குவானூர்தி ஒன்று தரித்திருக்கும் வசதிகளும் உள்ளன.

இந்தக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

Sharing is caring!