ஐக்கிய தேசியக் கட்சியின 72ஆவது ஆண்டுவிழா

ஐக்கிய தேசியக் கட்சியின 72ஆவது ஆண்டுவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவில், இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் ரணில் தலைமையில் விஷேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் சர்வமத வழிபாடுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி குறிப்பிட்டுள்ளது.

கடந்த 1946ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவர், டி.எஸ்.சேனாநாயக்க ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பிரதமரும் அவரே. அவரது மறைவின் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவரது மகனான டட்லி சேனாநாயக்க வகித்தார்.

டட்லி சேனாநாயக்கவுக்குப் பின்னர் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பை ஜே.ஆர்.ஜயவர்தன ஏற்றார். இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவரும் அவராவார்.

அவருக்குப் பின்னர் 1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச தலைமைப் பொறுப்பை ஏற்றார். கடந்த 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற மே தின ஊர்வலத்தில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு முதல் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமைப் பொறுப்பை வகித்துவருகின்றார்.

ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலமான நிலையில் காணப்பட்டாலும், தொடர்ந்து வந்த தேர்தல்களில் தோல்வியையே சந்தித்து வந்தது. எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று சுமார் 20 வருடங்களின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நல்லாட்சியை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!