ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில்

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

”ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் நெருக்கமடைய செய்தல் , நீதி , அமைதி மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும், பகிர்ந்த பொறுப்புக்களும் எனும் தொனிப்பொருளில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள 193 நாடுகள் இம்முறைய மாநாட்டில் பங்கேற்கின்றன.

ஈக்குவடோரைச் சேர்ந்த Maria Fernanda தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு ஒன்பது நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

உலக அமைதியை நோக்காக் கொண்டு இராஜாந்திர அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்களும் இதன் போது நடத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டெலா சமாதான மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டிலும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், நாளை பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ நா பொது சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் 4 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Sharing is caring!