ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல், அமைதியும், நேர்மையும், பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும், பகிர்ந்த பொறுப்புக்களும் எனும் தொனிப்பொருளில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

ஐ.நா. சபையைச் சேர்ந்த 193 நாடுகள் இம்முறைய மாநாட்டை பிரதிநித்துவப்படுகின்றன.

ஈக்குவடோரைச் சேர்ந்த மரியா பெர்னாண்டா (Maria Fernanda) தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு 9 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

உலக அமைதியை நோக்காக்கொண்டு நாடுகளுக்ககிடையிலான இராஜதந்திர கலந்துரையாடல்களும் இதன்போது இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தொற்றாநோய் தொடர்பிலான மாநாட்டில் காசநோய் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஐ.நா. சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நியூயோர்க் நகரை அடைந்தார்.

இதன் பிரதான கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் 4 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடும் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டிலும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பாக பூகோள நடவடிக்கைகளுக்கான விசேட சந்திப்பிலும் ஜனாதிபதி இன்று பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கூட்டத்தொடரில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுடனும் , ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதுடன், ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்துடனும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

Sharing is caring!