கச்சதீவு அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 16…ஏற்பாடுகள் நிறைவு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை எதிர்வரும் 16ஆம் திகதி நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆலய பங்குத்தந்தை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் திருவிழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வருடம் இலங்கையின் பல பிரதேசங்களில் இருந்தும் மற்றும் இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 16ஆம் திகதி கச்சதீவில் நடைபெறும் திருவிழாவில் பங்குபற்றச் செல்லும் யாத்திரிகர்கள் திருவிழாவுக்கு முதல் நாள் 15ஆம் திகதி காலை கச்சதீவு சென்று இரவு தங்கியிருந்து மறுநாள் திருப்பலியில் கலந்துகொள்ள ஆவன செய்யப்பட்டுள்ளது.

யாத்திரிகர்களுக்கான பஸ் போக்குவரத்து வசதி யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து குறிக்காட்டுவான் வரை 15ஆம் திகதி காலை 3.30 மணியிலிருந்து செயற்படுத்தப்படும். படகுப்போக்குவரத்து வசதி குறிக்கட்டுவானில் காலை 4.30 மணியிலிருந்து பகல் 10.30 மணிவரை செயற்படுத்தப்படும்.

யாத்திரிகர்களுக்கான ஒருவழிப் படகுக் கட்டணமாக குறிக்காட்டுவானில் இருந்து கச்சதீவுக்கு 325 ரூபாவும், நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு 225 ரூபாவும் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாத்திரிகர்களுக்கான உணவுவசதி இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனியார் கடைகள் ஆகியன இயங்குவதற்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!