கஞ்சா கடத்தல்…தொலைபேசி உரையாடல் ஆய்வு

நாட்டில் கைப்பற்றப்பட்ட பெருமளவான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் தொலைபேசி கலந்துரையாடல் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் பயன்படுத்திய சிம் அட்டைகளின் நிறுவனங்கள் ஊடாக, அவர்களுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வௌிநாட்டில் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருடன் தகவல்களை பரிமாறி, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை, துபாயிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரால், தெற்காசிய நாடொன்றைச் சேர்ந்த மற்றுமொரு கடத்தல்காரரூடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல்காரர் துபாயில் சுதந்திரமாகவுள்ளதாக விசாரணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தலுடன், துபாயில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷின் குழுவினருக்கு தொடர்பில்லை என இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொள்ளுப்பிட்டி, வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து 294 கிலோ 490 கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

இவை, 3,533 மில்லியன் ரூபா பெறுமதியுடைவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

 

Sharing is caring!