கடந்த 24 மணித்தியாலங்களில் 5 கொலைச் சம்பவங்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஊறுகஸ்மந்திய – ரத்தொடவில பகுதியில் வீடொன்றிற்குள் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு வீதியில் போடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் 37 மற்றும் 27 வயதுடைய இருவரே கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹல்துமுல்லை – முருதஹின்ன பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையிலான மோதலே இந்தக் கொலைக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதேநேரம், கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் சீதுவ பகுதியில் அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீண்ட காலமாக காணப்பட்ட குரோதமே இந்தக் கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்தோடு, ஜா-எல – வெலிகம்பிட்டிய பகுதியில் நேற்று (30) மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வண்டியில் சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது, பிறிதொரு மோட்டார் வண்டியில் வந்த இனந்தெரியாத சிலர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேறொருவரை இலக்கு வைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்

Sharing is caring!