கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் முதல் புத்தளம் , கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தொட்டை வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இதனால் கடல் சீற்றம் அதிகரிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்து.

களுத்துறை, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பால் காணப்படும் கடற்பிராந்தியங்களில் நாளை (07) மாலை வரை கடலலை 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்படுமாறும் கடற்றொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, அரபு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மேலும் விரிவடைந்து செல்வதால் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் தாழமுக்கம் வலுவடைந்து மினி சூறாவளியாக மாறுவதற்கான சந்தர்ப்பம் நிலவுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது வடமேல் திசையூடாக ஓமான் நாட்டு கரையை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் மற்றும் நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா குறிப்பிட்டார்.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமத்திய , தென் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்ந்தும நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Sharing is caring!