கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் இன்று பணிப்பகிஷ்கரிப்பு

அதிபர்கள் உள்ளிட்ட கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.

புதிய நியமனங்கள் வழங்கப்படும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் 11 தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கல்வி அமைச்சின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நீல் அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகயீன விடுமுறையிலிருக்கும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சிலரும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இன்று மூடப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், நியமனங்களும் கல்வி உயர்வுகளும் அரசியல் பேதங்கள் இன்றி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்களினதும் ஊடக நிறுவனங்களினதும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது எனவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Sharing is caring!