கிளிநொச்சிக்கான நீர் விநியோகம் தடைப்படும் நிலை

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் முன்னறிவித்தலின்றி தடைப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நிலவும் வறட்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி முகாமையாளர் குறிப்பிட்டார்.

தற்போது கிளிநொச்சி குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதுடன், குளத்தின் நீரின் தன்மை மாறி கடும் பச்சை நிறமாக காணப்படுகின்றது.

இந்தக் குளத்திலிருந்து நீரைப்பெற்றே நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நீரை சுத்திகரித்து பரந்தன் பகுதியில் உள்ள நீர்த்தாங்கியையும் கிளிநொச்சி நகரிலுள்ள நீர்த்தாங்கியையும் நிரப்புகின்றது.

நிரப்பப்படுகின்ற நீர் கிளிநொச்சி மாவட்டத்தின் குமரபுரம், தட்டுவன்கொட்டி, பாரதிபுரம், விவேகானந்தநகர், கிளிநொச்சி நகரம், கணேசபுரம், திருநகர், உதயநகர் போன்ற பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாளை (14) முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை சூழற்சி முறையில் நீர் விநியோகம் இடம்பெறும் என கிளிநொச்சி பிராந்திய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை முகாமையாளர் என். நவரூபன் தெரிவித்தார்.

தற்போது நிலவுகின்ற வறட்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீரினை சுத்திகரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மழை வரும் வரைக்கும் இந்நிலை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Sharing is caring!