கிளிநொச்சியில் இராணுவம் 24 ஏக்கர் விடுவித்தது
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவம் வசமிருந்த 24 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.
வட மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஐந்து மாவட்ட செயலகங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இங்கு இராணுவத்தினர் வசமிருந்த 24 ஏக்கர் தனியார் காணி இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் காணிக்கான பத்திரங்களை உரிமையாளர்களிடம் கையளித்தார்.
கடந்த 6 மாதங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 24,435 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்தது.
அத்துடன், மாவட்டத்தில் மேலும் 1485 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டது.
இதேவேளை, வட மாகாணத்தில் கடந்த 6 மாதங்களில் 62,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 11,000 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்தது.