குடும்பஸ்தரான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்

தலைமன்னார் பியரிலிருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தரான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளமையால் தலைமன்னார் கடற்படையினர் உட்பட அப் பகுதி மீனவ சமூகம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

நேற்று ஞாயிற்றுக் கிழமை (16) மாலை 6 மணியளவில் தலைமன்னார் பியரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இராமசாமி சிறிகாந் (வயது -30) என்பவர் வழமை போன்று இணைப்பு இயந்திர படகு ஒன்றில் தனியாக மீன் பிடிக்காகச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை (17) காலை அப் பகுதிக்கு மீன் பிடிக்காகச் சென்றவர்கள் கடலில் படகு ஒன்று வலைகள் கடலில் இடப்பட்ட நிலையில் இருப்பதை அவதானித்ததையடுத்தே படகில் மீன் பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை என்ற சம்பவம் தெரிய வந்துள்ளது.

இது விடயமாக தலைமன்னார் பொலிசார் மற்றும் தலைமன்னார் கடற்படையினருக்கு தெரியப் படுத்தியதைத் தொடர்ந்து தலை மன்னார் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் தலைமன்னார் கடற்படையினரும் அப் பகுதி மீனவ சமூகமும் காணாமல்போன மீனவரை தேடி வருகின்றனர்.

மீனவர் தலைமன்னார் பியர் கடற்கரையிலிருந்து தலைமன்னார் மேற்கு கடலை நோக்கி சுமார் பத்து கடல் மைல் தூரத்திலேயே மீன் பிடியின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sharing is caring!