குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை – மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேச ரீதியில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் LTTE அமைப்புக்கு எதிராக யுத்தம் மேற்கொண்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளவில்லை என மஹிந்த ராஜபக்ஸ டில்லியில் நேற்று (12) தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

பா.ஜ.க வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ, ‘இந்திய – இலங்கை சகோதரத்துவத்தின் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றியுள்ளார்.

தமது அரசாங்கம் தமிழ்மக்களை இலக்கு வைத்து இனவாத யுத்தத்தை மேற்கொள்ளவில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

LTTE அமைப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக அமைந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

யுத்தத்தின்போது LTTE உறுப்பினர்கள் 40,000 பேர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்து பொய்யானது எனவும் அந்த எண்ணிக்கை 8,000 ஐ விட அதிகரிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று பிற்பகல் மஹிந்த ராஜபக்ஸ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!