கூட்டு ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சம்பள உயர்வு கோரி இன்று போராட்டங்கள் இடம்பெற்றன.

அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேரர்சன், அஜோனா, அலுப்பவத்த, டொரிங்டன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, லிந்துலை – டிஸ்னா சந்தியில் சம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்ரா, மெராயா, டென்போல்ட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, தொழிலாளர்கள் சிலர் மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டக் கம்பனிக்காரர்களின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

இதேவேளை, சம்பள உயர்வுகோரி ஹட்டன் -ஸ்டடன் தோட்டத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஹட்டன் – புளியாவத்த பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் – புளியாவத்த பிரதான வீதியில் சில மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

பூண்டுல் ஓயா – தலவாக்கலை பிரதான வீதியில் வட்டகொட பகுதியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு கோரி லிந்துலை நகரிலும் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன் காரணமாக தலவாக்கலை – நுவரொலியா பிரதான வீதி மற்றும் தலவாக்கலை – டயகம பிரதான வீதியூடான போக்குவரத்து காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை தடைப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பூணாகலை – பண்டாரவளை பிரதான வீதியில் லியங்காவெல சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பண்டாரவளை – பூணாகலை பிரதான வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

Sharing is caring!