கைதிகளுக்கு நாளாந்தம் உணவு வழங்குவதில் மோசடி

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை உள்ளிட்ட சில சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு, நாளாந்தம் உணவு வழங்குவதில் மோசடி இடம்பெறுவதாக கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 5000 கிலோகிராமுக்கும் அதிக அரிசியை களஞ்சியப்படுத்தி வைத்து விற்பனை செய்வதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள பெருமளவான கைதிகளுக்கு வீடுகளில் இருந்து உணவு கொண்டுவரப்படுகின்றது.

அனைவருக்கும் உணவு வழங்குவதாக தெரிவித்து அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். மோசடியில் ஈடுபடுகின்றனர். கைதிகளுக்கு உரிய வகையில் உணவு வழங்குவதில்லை. சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளுக்கும் தேங்காய்கள் கொண்டுசெல்லப்படுகின்றன

என கைதிகளின் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை விலைமனு கோரலின் ஊடாக வழங்கப்படுவதுடன், உணவின் தரம் அடிக்கடி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் நாம் வினவியபோது, இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய நிராகரித்தார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் திணைக்களத்தின் உத்தரவுகளுக்கு அமையவே உணவு வழங்கப்படுகின்றது. குறைபாடுகள் காணப்படுவதற்கான சந்தர்ப்பமில்லை. சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் கண்காணிக்கின்றன. மோசடிகள் இடம்பெறுகின்றன எனின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இயலுமையுள்ளது. இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை

என துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அமைச்சுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, இது தொடர்பில் நாம் வினவியபோது நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இவ்வாறான சம்பவங்கள் அனைத்து சிறைச்சாலைகளுக்குள்ளும் நீண்ட காலமாக இடம்பெறுவதாகவும் அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் ஆராய்வதற்கு சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

சிறைச்சாலை கைதிகளுக்கு உணவு வழங்குவதில் மோசடி

சிறைச்சாலை கைதிகளுக்கு உணவு வழங்குவதில் மோசடி இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டு

Posted by Newsfirst.lk tamil on Wednesday, December 26, 2018

Sharing is caring!