கொடுமை…காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…அமெரிக்கா சுட்டிக்காட்டு

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் இளம் பெண்கள், இளம் குடும்ப பெண்கள் மீது அரச அதிகார்கள் மற்றும், இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளும் பாலியல் துன் புறுத்தல்களை புரிவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் கடந்த வருடத்தில் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

போரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்படும் நிதி உதவியை பெற முயலும் வேளை பாலியல் துர்நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள். அரசோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில்

ஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. போரின்போதும், இதன் பின்னரும் காணாமல் போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனையாக காணப்படுகிறது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொட காணாமல்போக செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.

சித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் மற்றும் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் இதனை தொடர்ந்தும் பின்பற்றுகின்றனர். குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக பொலிசார் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்.

2017 பெப்ரவரியில் அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படுவதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தபோதிலும், கடந்த வருடம் இலங்கை அரசு ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. பொலிசார் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடு முழுவதும் பின்பற்றுகின்ற னர் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம், கடந்த ஜூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வின்போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களை போன்று போர் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம், பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், சட்டத்தரணிகளையும் குடும்பங்களையும் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல் உட்பட சித்திரவதைகள், மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும், விடுதலையின் பின்னரும் அனுபவித்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிசாரும் அதிகளவான வன்முறைகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. காணாமல் போன தங்கள் கணவன்மார்கள் குறித்த தகவல்களை கோரிய மனைவியர்களை அரச அதிகாரிகளும், பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. போரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்பட்ட நிதி உதவியை பெற முயலும்போது பாலியல் துர்நடத்தையை எதிர்கொள்கின்றனர்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!